×

டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டர் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. தற்போது பார் உரிமம் பெற்றவர்கள், பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2ம் தேதியிட்ட அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த மனுக்களில், ஏற்கனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் இடையில் அந்த இடத்திற்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளபடவில்லை. நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க நிர்ப்பந்திக்க முடியாது. தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளரிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : Tasmac ,ICourt , Cancellation of tender for Tasmac bar license: ICourt orders
× RELATED திண்டுக்கல் அருகே மது விற்ற 7 பேர் கைது