×

தைவான் நாட்டின் பெகாட்ரான் நிறுவனம் தமிழகத்தில் ஸ்மார்ட் போன் உற்பத்தி துறையில் ரூ.1,100 கோடி முதலீடு: தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தைவான் நாட்டின் பெகாட்ரான் நிறுவனம் ரூ.1,100 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் அதிகளவில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் என பெகாட்ரான் தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆற்றிய உரை: தைவான் நாட்டின் பெகாட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தொடங்குவதை நான் வரவேற்கிறேன். இதன் மூலம் தமிழகத்தின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை வெளிப்படுகிறது. அந்த நம்பிக்கைக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பல நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அதற்கான முயற்சிகளில் நீங்கள் இறங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கலைஞர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருந்த நேரத்தில், ஹுண்டாய் வந்தது, ஃபோர்டு வந்தது, மிட்சுபிசி வந்தது என்று சொல்வதைப் போல, எனது ஆட்சிக் காலத்தில் இத்தகைய சிறப்பு வந்தது என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1,100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மட்டும், 14 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது. அதிலும் பெருமளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்து நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகிறேன். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் துவக்கியிருக்கிறது.வெகு விரைவில் ‘தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை’ வெளியிடப்பட உள்ளது.  திருப்பெரும்புதூர், ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் என்று மின்னணு உற்பத்தி மையங்கள் பெருகி வருகின்றன.

மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. முன்னணி அடைந்தவுடன், முதல் நிலையை நோக்கி உயர வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். 2030ம் ஆண்டிற்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்களது லட்சிய இலக்கு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறான முயற்சிகளின் அண்மையில்தான் ஒரு மிகப் பெரிய செமி-கண்டக்டர் உற்பத்தித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தற்போது, சீனாவில்தான், புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி, தமிழ்நாட்டினை அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முழு விநியோகச் சங்கிலியையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இத்தகைய நேரத்தில் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தித் திட்டம் இங்கே துவக்கப்பட்டுள்ளது. அது எங்களுக்கு உள்ளபடியே மகிழ்ச்சியை அளிக்கிறது, உற்சாகத்தை அளிக்கிறது.

இதற்காக பெகாட்ரான் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரம், உங்கள் இரண்டாவது கட்ட உற்பத்தித் திட்டத்தினையும் விரைவில் நீங்கள் இங்கேதான் துவங்க வேண்டும், துவங்கப் போகிறீர்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசுத் தரப்பில் அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும், உங்களது விரிவாக்கத் திட்டங்களையும், பிற உற்பத்தித் திட்டங்களயும், தமிழ்நாட்டிலேயே நிறுவிட வேண்டும் என்று அன்புடன் நான் உங்களுக்கெல்லாம் என்னுடைய கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன். உங்களைப் போன்றே, பிற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட அழைத்து வாருங்கள் என்று அன்போடு கேட்டு என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Taiwan ,Pegatron ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal , Taiwan's Pegatron invests Rs 1,100 crore in the smart phone manufacturing sector in Tamil Nadu: Chief Minister M.K.Stal's speech at the inauguration of the factory
× RELATED மன்னிப்பு கேட்டார் தைவான் அமைச்சர்