திருவில்லிபுத்தூரில் திருப்பதி பிரமோற்சவ விழாவில் சீனிவாசப் பெருமாள் அணிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி சென்றது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதி செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி கோயிலில், ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா விமரிசையாக நடக்கும். இதன் 5ம் நாள் திருவிழாவில், ஆண்டாள் சூடிய மாலையை திருப்பதி சீனிவாசப் பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்தாண்டு திருப்பதியில் பிரமோற்சவத்தின் 5ம் நாள் திருவிழா நாளை (அக். 1) நடைபெறுகிறது. இதையொட்டி, விருதுநகர் மாவட்டம்,

 திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலையை திருப்பதிக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி, ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்றது. இதற்காக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் காட்சியளித்தார். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாலை ஆண்டாளுக்கு யஅணிவிக்கப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஒரு கூடையில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் ஆண்டாள் கிளி ஆகியவை வைக்கப்பட்டு, நகரின் முன் மாடவீதிகளில் மேளதாளம் முழங்க, ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், திருவில்லிபுத்தூர் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: