×

வாலாஜாபாத் அருகே காஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து; குடோன் உரிமையாளர், மகள் உள்பட 3 பேர் பலி: குடோனுக்கு சீல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே கடந்த 28ம் தேதி இரவு ஒரு தனியார் குடோனில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் குடோன் உரிமையாளர், அவரது மகள் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இதைத் தொடர்ந்து நேற்றிரவு அந்த காஸ் குடோனை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில், தொழிற்சாலை மற்றும் உணவகங்களுக்கு தேவையான ராட்சத காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் குடோன் உள்ளது. இந்த குடோனை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இதில் வடமாநிலங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு தனியார் காஸ் குடோனில் திடீரென கரும்புகையுடன் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில், அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதுகுறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 நவீன தீயணைப்பு வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, குடோனில் சிலிண்டர்களை அகற்றி தீயை அணைத்தனர்.

இவ்விபத்தில் அங்கிருந்த தேவரியம்பாக்கத்தை சேர்ந்த பூஜா (19), மாணவர் கிஷோர் (13), கோகுல் (22), சந்தியா (21), நிவேதா (21), குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், சண்முகசுப்ரியன், ஆமோத்குமார், தமிழரசன் (10), குடவாசல் அருண் (22), குணால் (22) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஒரகடம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த 12 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால், நள்ளிரவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சுகுணாசிங், சுதாகர், சார் ஆட்சியர் சஞ்சீவனா உள்பட பலர் தீக்காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற 5 பேரில், ஆமோத்குமார் (22) என்பவர் பலியானார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடோன் உரிமையாளரின் மகள் சந்தியா (21) பலியானார். இதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் (47) பலியானார். இதன்மூலம் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு தனியார் குடோனில் இருந்த சிலிண்டர் உள்பட அனைத்து பொருட்கள் அகற்றி, பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து, அங்கு நேற்று நள்ளிரவு வருவாய் துறை அதிகாரிகள் வந்து, தனியார் காஸ் குடோனை பூட்டி சீல் வைத்தனர்.



Tags : Wallajabad ,Kudon , Gas cylinder explosion accident near Walajabad; Gudon owner, 3 killed including daughter: Gudon sealed
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு