×

சனி, ஞாயிறு, சரஸ்வதி பூஜை, விஜய தசமி தொடர் விடுமுறை எதிரொலி; பஸ், ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: பூ, பழங்கள், காய்கறிகள் விலை கடும் உயர்வு

சென்னை: சனி, ஞாயிறு, சரஸ்வதி பூஜை, விஜய தசமி தொடர் விடுமுறை எதிரொலியாக பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் பூ, பழங்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற செவ்வாய் கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற ெபாருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகம் முழுவதும் முக்கிய இடங்கள், மார்க்கெட், சந்தைகளில் ஆயுத பூஜைக்கான விற்பனை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனைக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிறு விடுமுறை, செவ்வாய் கிழமை  ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும் வருகிறது. இடையில் திங்கட்கிழமை மட்டும் உள்ளது. அந்த ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்தால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை ஆகி விடும். இதை பயன்படுத்தி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டனர். முன்னதாக திட்டமிட்டவர்கள். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அன்றே நிறைய பேர் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

இதனால், அனைத்து ஊர்களுக்கும் செல்லும் ரயில்களில் டிக்கெட் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. கடைசி நேரத்தில் பயணம் திட்டத்தை வகுத்தவர்கள் பஸ், ரயில்களில் எப்படியாவது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதனால் அவர்கள் கடைசி நேரத்தில் தனியார் பஸ்களை நாடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் தாறுமாறாக கட்டணம் உயர்ந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.750 முதல் ரூ.900 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இது இன்றைக்கு பயணம் செய்ய ரூ.4000 என்று வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருச்சிக்கு ரூ.800 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இது ரூ.2300 வரையும், சென்னை டூ கோவைக்கு ரூ.1000 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் ரூ.3000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே போல பல்வேறு இடங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சிடைந்துள்ளனர். எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் டிக்கெட் கட்டணத்தை பொருட்படுத்தாமல் தங்கள் பயணத்தை தொடர முடிவு எடுத்து டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் வரும் அக்.4, 5ம் தேதிகளில் கொண்டாடப்படுகின்றன. இதற்காக ஊருக்குச் செல்ல விரும்பும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், மாணவர்கள், உள்ளிட்டோர், இடையில் இருக்கும் திங்கள்கிழமை (அக்.3) ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, இன்று முதலே பயணிக்கத் தொடங்கி விட்டனர்.

அதே நேரத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதே போல் பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி நேர பயணத்தால் நேற்று மாலை முதல் கோயம்பேடு பஸ் நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பூக்கள் வருவது வழக்கம். நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.600, முல்லை ரூ.450, ஜாதி ரூ.300, கனகாம்பரம்  ரூ.300, சாமந்தி ரூ.200, சாக்லெட் ரோஸ் ரூ.100, மஞ்சள் ரோஸ் ரூ.140,  பன்னீர் ரோஸ் ரூ.80, அரவிபூ ரூ.200, ரெட் அரளிபூ ரூ.250, மருகு ரூ.100,  சம்பங்கி ரூ.100, ஆரஞ்சு ரோஸ் ரூ.120 என விற்பனையானது.

ஆனால், ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.900, முல்லை ரூ.750, ஜாதி ரூ.360, கனகாம்பரம் ரூ.600, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.140, சாக்லெட் ரோஸ் ரூ.140, மஞ்சள் ரோஸ் ரூ.160, ஆரஞ்சு ரோஸ் ரூ.160, பன்னீர் ரோஸ் ரூ.100, அரளி ரூ.250, ரெட் அரளி ரூ.300 என்றும்  விலை அதிகரித்தது.

இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரி பாலமுருகன் கூறும்போது, பூக்களின் வரத்து குறைவு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதே போல் ஆயுதபூஜை கிட்ட நெருங்கி வருவதால் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

அதே நேரத்தில் ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யாப்பழம், மாதுளம்பழம், அன்னாச்சி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயுத பூஜைக்கு ஒரு நாளுக்கு முன்னர் இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Saraswati Puja ,Vijaya Dasami , Saturday, Sunday, Saraswati Puja, Vijaya Dasami serial holiday echo; Crowds of people in buses and trains: Prices of flowers, fruits and vegetables have risen sharply
× RELATED காவல்துறை மீதான ஆர்எஸ்எஸ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு