திருவாடானை பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கி அழிந்து வரும் ஊரணிகளை அரசு மீட்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

திருவாடானை: திருவாடானையில் பழமை வாய்ந்த ஊரணிகள் அழிந்து வருகின்றன. அவற்றை மீட்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை மிகவும் பழமையான ஊராகும். தற்போது சிறிது சிறிதாக நகரமாக மாறி வருகிறது. திருவாடானையில் தாலுகா அலுவலகம் முதல் நீதிமன்றம் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அனைத்து வகை அரசு அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகிறது.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஊரில் நீர்நிலைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. ஏக்கர் கணக்கில் இருந்த ஊரணிகள் சுருங்கி வந்து விட்டது. அந்தந்த பகுதியில் ஊரணிகளை பாதுகாக்காமல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். சுமார் 500 ஆண்டுகளை கடந்து விட்ட ஊரணிகள் இன்று சுருங்கி இருக்கின்ற இடம் தெரியாமல் மாறி வருகிறது.

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில் முன்பாக வாசுகி தீர்த்தம் பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக சரவணப் பொய்கை, ஆதிரத்தினேஸ்வரர் கோயிலுக்கு தென்பக்கமாக அகஸ்திய முனிவர் தவம் இருந்த அகஸ்தியர் ஊரணி உள்ளது. அதற்கு தெற்கே மகாலிங்கபுரத்தில் குண்டூரணி, மங்கள நாதர் கோயில் முன்பாக மங்களாம் குளம் என திருவாடானையை சுற்றி ஏராளமான ஊரணிகள் உள்ளன. இவை எல்லாம் நான்குபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி விட்டது.

மேலும் மராமத்து செய்யாமல் முள்செடிகள் படர்ந்து ஊரணி இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டது. அரசு ஆவணங்களில் மட்டுமே ஊரணிகள் உள்ளன. இன்னும் சில ஆண்டுகள் கடந்து விட்டால் ஊரணி இருந்த இடமே தெரியாமல், அனைத்தும் வீடுகளாகவும் விளை நிலங்களாகவும் மாறிவிடும் சூழ்நிலை உருவாகி வருகிறது.எனவே அரசு பழைய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு மறு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வாரவேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

திருவாடானை பகுதி பொதுமக்கள் கூறுகையில், மற்ற ஊர்களை விட மிகவும் பழமையான வரலாற்று தொடர்போடு உள்ள ஊரணிகள் திருவாடானையில் அதிகளவில் உள்ளன. அவைகள் எல்லாம் தற்போது உருக்குலைந்து மேடாகி வருகிறது.குறிப்பாக அரசு கல்லூரி அருகே உள்ள மங்களநாதன் குளம் சுற்றுச்சுவர் இடிந்து இரண்டு ஆண்டுக்கு மேல் மராமத்து செய்யாமல் அப்படியே கிடக்கிறது. பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சரவணப் பொய்கை என்ற குளம் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி விட்டது.

கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள அகஸ்தியர் குளம், சீமை கருவேல மரங்களால் குளம் மூடி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. அதன் அருகே இருந்த குண்டு குளமும் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை கட்டி பாதியாக சுருங்கச் செய்து விட்டனர். இன்னும் இதுபோன்று ஏராளமான குளங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமலும் அழிந்து வருகிறது.

இப்பகுதியில் பூமிக்கு அடியில் உவர்நீராக இருப்பதால் முன்பு இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் ஏராளமான ஊரணிகளை வெட்டி தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் சில சுயநலவாதிகளாலும் அக்கறையற்ற பொதுமக்களாலும் கடமை தவறிய அதிகாரிகளினாலும் பழமை வாய்ந்த ஊரணிகள் அழிந்து வருகின்றன. எனவே இனிமேலாவது இந்த ஊரணிகளை காக்கும் வகையில் மறு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அரசு சிறப்பு கவனம் எடுத்து ஊரணிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சுகாதாரமின்றி சூரிய தீர்த்த குளம்

திருவாடானை சினேக வல்லியம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் உள்ள வடகிழக்கு பகுதியில் சூரியதீர்த்த குளம் உள்ளது. சூரிய பகவான் இந்த சூரிய தீர்த்த குளத்தில் உள்ள தீர்த்தத்தை எடுத்துச் சென்று இவ்வாலயத்தில் ரெத்தினங்களால் ஆன லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஆடானை புராணம் கூறுகிறது. மேலும் இந்த சிவாலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோவிலின் வளாக வடகிழக்கு பகுதியில் இருக்கும் சூரிய தீர்த்த குளத்தில் உள்ள தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்தால் சகல தோஷங்களும் விலகி நன்மை ஏற்படும் என்ற ஐதீகத்தால் இன்றளவும் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த சூரிய தீர்த்த குளம் முட்புதர்கள் மண்டி கழிவுநீர் தேங்கியது போல் சுகாதாரமின்றி பயன்பாடற்று உள்ளது. இந்த சூரிய தீர்த்த குளத்தை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: