×

திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

ஆந்திரா: திருப்பதி பிரமோற்சவ விழாவின் 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார்.  பிரமோற்சவத்தின் 4ம் நாளான இன்று கலியுகத்தில் தம் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை அருளக்கூடிய வகையில் சொர்க்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை தரும் கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார்.

பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துக்கு மத்தியில், கற்பக விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலையை அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பதிக்கு கொண்டு செல்கின்றனர். பிரமோற்சவத்தின் 5ம் நாளான நாளை காலை மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கும், மூலவருக்கும் அணிவிக்கப்படவுள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை இரவு நடைபெறவுள்ளது. இதனை காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Tirupati Promotsavam ,Malayappa Swami Street Walk ,Karpaka Vrutsa Vahana ,Rajamannar Akaraman , Tirupati, Kalpaka Virutsa Vahanam, Rajamannar decoration, Malayappa Swami
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி...