×

தனியார் காஸ் குடோன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில், தொழிற்சாலை மற்றும் உணவகங்களுக்கு தேவையான ராட்சத காஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் தனியார் குடோன் உள்ளது. இதை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு வடமாநிலங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. தகவலறிந்த காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 நவீன தீயணைப்பு வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து, 3 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.

இதில் தேவரியம்பாக்கத்தை சேர்ந்த பூஜா (19), மாணவர் கிஷோர் (13), கோகுல் (22), சந்தியா (21), நிவேதா (21), குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், சண்முகப்ரியன், ஆமோத்குமார், தமிழரசன் (10), குடவாசல் அருண் (22), குணால் (22) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 5 பேர்  80 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், நேற்று முன்தினம்  நள்ளிரவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், மாவட்ட கலெக்டர்கள் செங்கல்பட்டு ராகுல்நாத், காஞ்சிபுரம் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சுகுணாசிங், சுதாகர், சார் ஆட்சியர் சஞ்சீவனா உள்பட பலர் தீக்காயம் அடைந்தவர்களை நள்ளிரவில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி, மருத்துவர்களிடம் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து, தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

* ஊராட்சி மன்ற தலைவர் கைது
இந்த தீவிபத்து தொடர்பாக, குடோன் உரிமையாளரின் சகோதரரும், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான அஜய்குமார், மனைவி சாந்தி, குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், பொன்னிவளவன் மற்றும் மோகன் ராஜ் ஆகிய 5 பேர் மீது ஒரகடம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அஜய்குமாரை கைது செய்துள்ளனர். இவர், முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* 2 பேர் உயிரிழப்பு
இந்த தீ விபத்தில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் ஆமோத் குமார் (22) ஏற்கனவே உயிரிழந்தார். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தியா (21) தற்போது உயிரிழந்தார்.


Tags : Private Cass Kudon fire ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...