×

ஜல்லிக்கட்டு வழக்கு 3 வாரத்தில் அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜல்லிகட்டு தொடர்பான வாதங்களை அடுத்த மூன்று வாரத்தில் அனைத்து தரப்பினரும் அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை ஒன்றிய அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, தமிழக அரசு ஜனாதிபதி ஒப்புதலோடு புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி மீண்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உட்பட 15க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அனிருத்தா போஸ் மற்றும் எச்.ராய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரத்தில் அடுத்த மூன்று வாரத்தில் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் என அனைத்து தரப்பினரும் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பது ஏன், அதனை ஆதரிப்பது ஏன், போன்ற அனைத்து வாதங்களும் அடங்கிய விவரங்கள் உள்ளடங்கி இருக்க வேண்டும்’ என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Jallikattu ,Supreme Court , Jallikattu case report in 3 weeks: Supreme Court orders
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு