சென்னை: ஒன்றிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போதும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின்போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் முழு உஷார் நிலையில் இருக்கவும், சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில் பிஎப்ஐ அமைப்பை சட்டவிரோத அமைப்பாக ஒன்றிய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவிதித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ளார்.
