கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 471 கோயில்களில் கையடக்க கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூசைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்க கணினி வாயிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் 471 கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டுகளில் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

மேலும், 100 கோயில்களை இந்தாண்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 300 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. சிறப்பு தரிசனத்துக்கு என தனி வழிமுறைகள் உள்ள நிலையில், பக்தர்கள் அதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கோயில்களில் கையூட்டு பெற்று கொண்டு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு காக்க வேண்டும் என முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். கலகத்தை உண்டாக்குவது, பிரச்னை ஏற்படுத்துவதும் மதம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதும் திராவிட மாடல் அல்ல. பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை  ஆணையர் குமரகுருபரன், ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் மனோஜ்  குமார், அக்க்ஷய் சதுர்வேதி, ஜெய்சங்கர், ஆஷிஷ், முதுநிலை கணக்கு  மேலாளர் பிரசன்னா, தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குநர்கள்  கீதாராணி, கோவிந்தன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: