×

250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மஹால் சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியகமாகிறது: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹூமாயூன் மஹால், சுதந்திர போரட்ட வீரர்களின் அருங்காட்சியகமாக மாற வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்  தெரிவித்துள்ளனர். சென்னை, சேப்பாக்கத்தில் பழமை வாய்ந்த ஹூமாயூன் மஹால் உள்ளது. இந்த கட்டிடத்தை, பழமை மாறாமல் புனரமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. 13 பெரிய ஹால்கள், நான்கு வராண்டாக்கள், மேற்கூரையை தாங்கி வலுவாக  நிற்கும் தேக்கு மரக்கட்டைகள், பெரிய ஜன்னல்கள் என பிரமாண்டமாக தயாராகி  வருகிறது ஹூமாயூன் மஹால். 20.2.2019ல் இதை புனரமைக்கும் பணி தொடங்கியது. 18 மாதங்களில் நிறைவடைய வேண்டிய பணிகள் கொரோனா பரவல் காரணமாக தடைபட்டது. புனரமைப்பு பணிகள் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இதன் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் முகலாய பேரரசர் ஆற்காடு நவாப் முகமது அலிகான் ராஜாவுக்காக ஆங்கிலேய கட்டிட கலைஞர் பால்பென் பீல்டின் இந்த அரண்மனையை கட்டினார். இந்த மஹாலின் மொத்த பரப்பளவு 76,567 சதுர அடி. முகலாய பேரரசர் ஹூமாயூன் நினைவாக இந்த மஹாலுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது. இந்த மஹால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் வருவாய் வாரிய தலைமை அலுவலமாக செயல்பட்டு வந்தது. பின்னர் பராமரிப்பு பணிகள் இல்லாமல் போனதால் புதர்மண்டியது. கட்டிடத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்து, இடிந்துவிழும் நிலையிலிருந்ததால் ஹூமாயூன் மஹாலை இடிக்க மாநில அரசு முடிவு செய்தது. இந்தியாவின் முதல் ‘இந்தோ சரானிக்’ கட்டிடம் என்பதால் சமூக ஆர்வலர்கள் இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக, இடிக்கும் முயற்சி கைவிடப்பட்டு அதனை பழமை மாறாமல் புனரமைப்பு செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, 41.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

* புனரமைப்பு முறைகள்
ஹூமாயூன் மஹால் கட்டப்பட்டபோது பின்பற்றிய அதே கட்டிட கலை முறை மூலமாகவே புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக சிறப்பு வேலை தெரிந்தவர்கள் இதில் பயன்படுத்தப்பட்டனர். கட்டுமானத்திற்கு பழங்காலத்தில் பயன்படுத்திய பொருட்களே பயன்படுத்தப்பட்டது. இந்த பூச்சு முறை, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக, அதுவும் ஹூமாயூன் மஹால் புனரமைப்பு பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் 31.8.2022க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கென ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், ஹுமாயூன் மஹால் அருங்காட்சியமாக மாற வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Humayun Mahal , 250-year-old Humayun Mahal to become museum of freedom fighters: Public works officials inform
× RELATED 250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மஹாலில்...