×

பீச் ஹவுஸ்க்கு வீடுகளை விற்க மறுத்த குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

சென்னை: தனியார் பீச் ஹவுசுக்கு வீடுகளை விற்க மறுத்த குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புதுநடுக்குப்பம் கடல் பகுதியில் 100க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பாளையத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் , இளமதி(52), வேலாயுதம்(48), சேகர்(46), ஆரணி (42), ஆரணி (62) ஆகிய ஐந்து நபர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து 5 நபர்களும் செங்கல்பட்டு கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ‘‘சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் தங்கள் 5 பேரையும் அந்த இடத்தை சென்னையை சேர்ந்த ஒருவருக்கு விற்று விடுமாறு  கூறி, 100 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டு தருமாறு தொடர்ந்து மிரட்டி வந்தனர். ஆனால் நாங்கள் கையெழுத்திட மறுத்து விட்டோம், இதன் காரணமாக பஞ்சாயத்துகாரர்கள் கிராமத்தைச் சேர்ந்த 5 குடும்பங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

கிராமத்தில் உள்ள கடைகளில், சம்பந்தப்பட்ட ஐந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட எந்த வித பொருட்களும் விற்கக் கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தெரிகிறது. அதேபோல கிராமத்திலிருந்து ஆட்டோவில் செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதுதவிர கடந்த ஒன்றாம் தேதி அன்று நடைபெற்ற,  இளமதி என்பவரின் மகன் அஜித்குமார் திருமண நிகழ்ச்சியில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களையும் கலந்து கொள்ளக் கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் அறிவித்ததாக தெரிகிறது. பஞ்சாயத்துதாரர்களின் உத்தரவை மீறி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், ஒவ்வொரு நபர்களுக்கும் தலா ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்று பஞ்சாயத்துதாரர்கள் உத்தரவிட்டனர்.

இதேபோல பிரதானமாக மீன் பிடி தொழில் செய்யும் படகை கடலில் இருந்து, கடற்கரையில்  டிராக்டர் உதவியுடன் இழுத்து நிலை நிறுத்துவதற்கு, அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஐந்து குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.  கடந்த 26ம் தேதி, செல்ல பிராணிகளாக வளர்த்து வந்த நான்கு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த நாய்களை சுட்டது போல் உங்களையும், குடும்பத்தையும் சுட்டு விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இது சம்பந்தமாக நாளை அந்த பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் நாய்கள் சுடப்பட்டு இருக்கும் வீடியோவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags : Beach Houses ,Collector, S.B. ,Panchayats , Families who refused to sell their houses to Beach Houses were evicted from the village: Collector, S.B. demanded action against Panchayats. Complain to the office
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...