×

வலியால் விலகுகிறார் பும்ரா: உலக கோப்பை டி20

மும்பை: இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா(28).  முதுகுவலியால் அவதிப்பட்டதால் ஜூலை மாதம் முதல் , சமீபத்தில் அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடர் வரை அவர் ஆடவில்லை. இந்நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி(என்சிஏ)- யில் சிகிச்சையும், பயிற்சியும் பெற்று வந்த  பும்ரா மீண்டும் அணியில் இடம் பிடித்தார். ஆஸியில் நடக்க உள்ள டி20 உலக கோப்பை, அதற்கு முன்னதாக நடக்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவும் சேர்க்கப்பட்டார். ஆஸிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. தொடர்ந்து தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பும்ரா சேர்க்கப்படவில்லை. அதற்கு பயிற்சியின் போது பும்ராவின் முதுகு வலி அதிகமானது தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து மட்டுமின்றி, ஆஸியில் நடக்கும் உலக கோப்பை போட்டியில் இருந்தும் பும்ரா விலகுவதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது. காரணம் பும்ராவின் காயம் பரிசோதிக்கப்பட்ட போது, அவர் குறைந்தது 2 மாதம் முதல் 6 மாதம் வரை கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து பும்ராவும் நேற்று என்சிஏவுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதனடிப்படையில் பும்ரா விலகல் உறுதியாகி விட்டது. அது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கூடவே பும்ரா விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக இ ருக்கும் என்றும் சொல்லப் படுகிறது.
அதுமட்டுமின்றி வலியில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு முன்பே அணியில் சேர்த்ததால் தான் இந்த பிரச்னை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

* சிராஜ்? ஷர்துல்?
ஆஸியில் டி20 உலக கோப்பை அக்.16 ம் தேதி தொடங்குகிறது. அதற்காக இந்திய அணி அக்.6ம் தேதி ஆஸிக்கு புறப்படுகிறது. அதனால் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. கூடவே காயத்தில் இருந்து மீண்ட ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

Tags : Bumrah ,World Cup T20 , Bumrah withdraws with pain: World Cup T20
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு