கொரிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்திய இணை

சியோல்: கொரிய ஓபன் ஏடிபி ஆடவர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் அரையிறுதியில் விளையாட இந்திய இணை யூகி பாம்ரி, சாகேத் மைனேனி ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். தென் கொரிய தலைவர் சியோலில் நடைபெறும் இந்த தொடரில் நேற்று இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. அதன் முதல் காலிறுதியில் இந்திய வீரர்கள் யூகி பாம்ரி, சாகேத் மைனேனி இணை, டீகோ ஹிடல்கோ (ஈகுவடார்), கிறிஸ்டியன் ரோட்ரிக்ஸ்(கொலம்பியா) இணையுடன் மோதியது. அதில் இந்திய இணை அசத்தலாக விளையாடி ஒரு மணி 12 நிமிடங்களில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த  டீகோ, கிறிஸ்டியன் இணை, இந்திய இணையை விட தரவரிசையில் முன்னணியில் இருப்பவர்கள். நடப்பு போட்டித் தொடரின் தரவரிசையிலும் 3வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில்  சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வரும் இந்திய இணை ஆகஸ்ட் மாதம் வென்ற லெக்சிங்டன் சேலஞ்சர் கோப்பை உட்பட இந்த ஆண்டு ஏற்கனவே 6 பட்டங்களை வென்றுள்ளனர்.

Related Stories: