×

அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

வேதாரண்யம்: ரூ.288 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் 100 கி.மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மீட்டர் கேஜ் பாதையில் ெரயில் போக்குவரத்து நடந்தது. முற்காலத்தில் பெரிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாத போது வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்கவும், வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகும் உப்பை மூட்டைகளாக கட்டி வெளியூர்களுக்கு கொண்டு செல்லவும் இந்த ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்த மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணிகள் நடந்து வந்தன. அகஸ்தியன்பள்ளியில் தொடங்கி வேதாரண்யம், தோப்புத்துறை, குரவப்புலம், கரியாப்பட்டினம், மேலமருதூர், ஆதிரெங்கம் வழியாக திருத்துறைப்பூண்டி வரை 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டு்ள்ள இந்த அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் 76 பாலங்களும், 11 ரெயில்வே கேட்டுகளும் உள்ளன. ரூ.288 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அகல ரயில்பாதையில் எப்போது ரயில் போக்குவரத்து தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி ரயில் நிலையத்தில் அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் தொடங்கியது. முன்னதாக ரயில் இன்ஜினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அகல ரயில் பாதையில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தை தென்னக ெயில்வே தலைமை பொறியாளர் கோஸ்சாமி தொடங்கி வைத்தார்.

100 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் இன்ஜின் 30 நிமிடங்கள் பயணம் செய்து 1.30 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கு இன்ஜினுக்கு பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு பெற்று உள்ளதால் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி இடையே விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.




Tags : Agastiyanballi- Thiruthirapundi , 100 km on Agasthianpalli- Thirutharapoondi broad gauge railway line. High speed train locomotive test run
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி,...