மானாமதுரை வழியாக ராமேஸ்வரம்-கோவை பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இயக்க கோரிக்கை

மானாமதுரை: ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக பழநி, கோயம்புத்தூருக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொழில் நகரமாகவும் தென்இந்தியாவின் மான்செஸ்ட்டராகவும் கோவை விளங்குகிறது. இதனால் தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் பல்வேறு பணிகள் நிமித்தம் அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் தென்மாவட்டங்களிலிருந்து அதிகளவில் மாணவ, மாணவிகள் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.தென்மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வர்த்தகம் தொடர்பாக அதிகளவில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யம் வியாபாரிகளுக்கு பயணநேரம் மிக முக்கியம் ஆகும்.

தென்மாவட்டங்களிலிருந்து கோயம்பத்தூருக்கு தற்போது நாகர்கோவில் - கோவை பகல் நேர பயணிகள் ரயில், நாகர்கோவில் - கோவை இரவு நேர சூப்பர்பாஸ்ட் ரயில் என 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு ரயில்களும் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த 2 ரயில்களும் தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படவில்லை. ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் 8 மணி 35 நிமிடங்கள் என அதிக பயணநேரத்தை எடுத்து கொள்கின்றன. இதனால் வயதானோர், மாற்றுத்திறனாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதியடைகின்றனர்.

இதனால் பெரும்பாலானோர் பஸ் பயணத்தை விட ரயில்பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். எனவே ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை வழியாக கோயம்புத்தூருக்கு சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் 5 மணி நேரத்தில் கோவை சென்றுவிடலாம்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ராமேஸ்வரத்திலிருந்து பகல்நேரத்தில் பயணிக்கும் வகையில் ராமநாதபுரம் பரமக்குடி மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ராமேஸ்வரத்தில் இருந்து பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இயக்கினால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து கோவை, மதுரை போன்ற பல்வேறு இடங்களுக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

Related Stories: