×

சேதமடைந்த சாலைகளை சீரமைத்து கிராமங்களுக்கு பஸ் இயக்க வேண்டும்: சிங்கம்புணரி மக்கள் கோரிக்கை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சாலையை சீரமைத்து மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உரத்துப்பட்டி, கள்ளங்களப்பட்டி, மிண்ணமலைப்பட்டி, கீழவண்ணாயிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பொன்னமராவதி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இக்கிராமங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இச்சாலை கடந்த 24 வருடங்களுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இச்சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சில இடங்களில் சாலை வனத்துறை பகுதிக்குள் வருவதாக கூறி சாலை அமைக்கும் பணியை கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர். இதனால் வனத்துறைக்குள் வரும் பகுதியை விட்டுவிட்டு மற்ற இடங்களில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் துண்டு துண்டாக சாலைகள் போடப்பட்டது.

இச்சாலை சில ஆண்டுகளிலேயே மழைக்காலங்களில் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் இவ்வழியாக செல்லும் அரசு மற்றும் மினி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாதவன் என்பவர் கூறும்போது, மதுரை, திண்டுக்கல் பகுதியில் இருந்து பொன்னமராவதிக்கு செல்லும் மக்கள் இச்சாலை வழியாக சென்று வந்தனர். கொட்டாம்பட்டியிலிருந்து பொன்னமராவதிக்கு காலை 6.30, 7.30, மதியம் 1 மணி மற்றும் மாலை நேரங்களில் டவுன் பஸ் மற்றும் மினி பஸ் இயங்கி வந்தது. பள்ளி மாணவர்கள் விவசாய பெருமக்கள் பேருந்து சேவையை பயன்படுத்தி வந்தனர்.

மேலும் ரேஷன் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வருவதற்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது தலைச்சுமையாக பொருட்களை 5 கிலோமீட்டர் தூரம் கரடு முரடான சாலையில் பொதுமக்கள் தூக்கிச் செல்ல வேண்டி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Damaged road, buses should be run to villages, Singampunari people demand
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை