×

வாட்ஸ் அப் குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது: வடபழனி போலீசார் அதிரடி

சென்னை: வாட்ஸ்அப் குழு அமைத்து வடபழனியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த, வடமாநில சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, சொகுசு கார், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகரில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் கஞ்சாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடபழனியில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்களிடையே அதிகளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக வடபழனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, நேற்று முன்தினம் வடபழனி பிரபல தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள பொன்னம்மாள் தெருவில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சொகுசு காரை வழிமறித்து சோதனை செய்த போது, அதில் 11 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொளத்தூர் கன்னியப்பன் ெதருவை சேர்ந்த ஆகாஷ் (24), மற்றொருவர் வடமாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இவர்கள், வடபழனியில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதற்காக தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து உயர் ரக கஞ்சா கடத்தி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதைதொடர்ந்து போலீசார் சிறுவன் உள்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், கஞ்சா விற்பனைக்காக வாட்ஸ்அப் குழு அமைத்துள்ள 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : WhatsApp ,Vadapalani police , Two arrested for selling ganja to college students by setting up a WhatsApp group: Vadapalani police in action
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...