அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை கடந்த 16ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டுக்கே சென்று திடீரென சந்தித்தார். இதையடுத்து, கடந்த 17ம் தேதி பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னை, ஜெமினி பாலம் அருகே உள்ள பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில், தற்போது அதிமுகவில் அமைப்பு செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அரசியல் ஆலோசகர் பதவி வழங்கி ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் காலை திடீரென அறிவித்தார்.

ஓபிஎஸ் அறிவித்த சில மணி நேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்தே நீக்குவதாகஎடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்றார். அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வைத்திலிங்கம் எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்களும் உடன் சென்றனர். பின்னர் அனைவரும் சிறிது நேரம் அவரது வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கவே ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டுக்கு சென்றதாக ஆதரவாளர்கள் கூறினர்.

Related Stories: