நீதிமன்றம் சென்று பொதுமக்கள் அலைவதை தடுக்கும் வகையில் பதிவுத்துறைக்கு போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட சொத்து உரிமையாளர்கள் ஐந்து பேரை அழைத்து வந்து, நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், அதிக ஆவணங்கள் பதிவாகும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படின் இணைய வழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றினைப் பெறும் வசதியையும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில், மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அதிகாரிகளுக்கோ அதிகாரம் அளிக்கப்படவில்லை. அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய, பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலையே இருந்தது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி, பதிவுச்சட்டம், 1908ல் தமிழ்நாட்டிற்கு பொருந்தும் வகையில் இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22B ஆனது ‘‘போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.’’ பிரிவு 77A ஆனது ‘‘நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை ரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.’’

மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் இணையவழியாக ரூ.5,000 செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர ஆவணப்பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம். இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதி: கடவுச்சீட்டு மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்திட இணையவழியில் விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும்  பதிவுத்துறைச் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, மற்றும் பதிவுத்துறை தலைவர் சிவனருள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: