முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விக்கிரமராஜா சந்திப்பு: வணிகர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

சென்னை:  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வணிகர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், வணிகர்நல வாரிய உறுப்பினர்கள் நியமனத்துடன் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் விற்பனை மையங்களை தவிர்த்து இதர இடங்களில் கொள்முதல் செய்யும் உணவு பொருட்களுக்கு அதிகாரிகள் செஸ் வரி விதிப்பதையும், அப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகளின் அத்துமீறலை தவிர்த்திடவும் வேளாண் விளை பொருள் அரசாணையை திரும்ப பெற்று உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.வணிக வரித்துறை அதிகாரிகள், சில்லறை வணிக நிறுவனங்களில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் ஆய்வு செய்து கடைகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி கடைகளில் உள்ள வாடகை முரண்பாடுகளை நீக்கும் வகையில், அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் அடங்கிய ஒரு உயர் மட்ட குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும். அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளில் வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு நியாய வாடகையை நிர்ணயித்து கடை சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்த்திட வேண்டும். எம்எஸ்எம்இ பதிவு பெற்ற வணிர்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பெருளாளர் சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: