×

ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது-2 கிலோ பறிமுதல்

விழுப்புரம் : தமிழகத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள், வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே இருப்பு பாதை போலீசார் ஹவுராவிலிருந்து-புதுச்சேரி நோக்கி வந்த ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இன்ஜின் பகுதியை அடுத்துள்ள முன்பதிவில்லா பெட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் மஞ்சள் நிற பையுடன் அமர்ந்திருந்ததை பார்த்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு லிட்டர் கஞ்சா ஆயில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலம் சந்திரகிரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஷிகுமார்கிரி(28) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர் ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கஞ்சா பொட்டலங்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து ரயில்வே போலீசார், விழுப்புரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வாலிபரை ஒப்படைத்தனர். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு
பிரிவு போலீசார் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வருகிறது, புதுச்சேரியில் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் மேற்கு வங்கத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தை புலித்தோலை ரயில்வே இருப்புபாதை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது கஞ்சா கடத்திவந்த நபரை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Odisha ,Puducherry , Villupuram: Police are active in Tamil Nadu to completely stop the sale of cannabis and tobacco products banned by the government
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை