உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாரம்பரிய இசை நடனத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு

கூடலூர் : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள ஊசி மலை காட்சி முனை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பழங்குடியினரின் பாரம்பரிய இசை நடனத்துடன் மலர் செண்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. எஸ்கேஏஎல் சர்வதேச சுற்றுலா அமைப்பு கோவை, சிடிஆர்டி பழங்குடியினர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஊசிமலை காட்சி முனைப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் செண்டு வழங்கியும் இனிப்பு வழங்கியும் வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் பழங்குடியின பெண்கள் நடனமாடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இங்கு வந்த உள்ளூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகளும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிடிஆர்டி அறக்கட்டளை அறங்காவலர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அர்ஜுனன், மணிகண்டன், சிடிஆர்டி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், கல்லூரி மாணவ மாணவியர், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: