×

அரசு பள்ளிகளில் சுகாதாரத்தை கடைபிடிக்காத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சுகாதாரத்தை கடைபிடிக்காத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மோகன் எச்சரித்துள்ளார்.
விழுப்புரம் அருகே தளவானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகம், கழிப்பறை ஆகியவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என ஆட்சியர் மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தளவானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் முறை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர், மாணவர்களுக்கு பாடம் நடத்தி அதிலிருந்து கேள்வி கேட்டு மாணவர்களின் அறிவுத்திறனை சோதனை செய்து சரியாக பதில் அளித்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாடம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுப்புற சூழ்நிலைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிப்பறையினை பயன்படுத்திய பின்பு கை மற்றும் கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளி வளாகத்தை சுத்தமாக பராமரித்திட அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு தினந்தோறும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பும், மதிய உணவு இடைவெளிக்கு பின்பும் கழிவறைகளை பராமரித்திட அறிவுறுத்தப்பட்டது. இதனை சரியாக கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
முன்னதாக, ரூ.16.5 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம், காவனிப்பாக்கம் சாலையில் 7 மீட்டர் நீளத்திற்கு மலட்டாற்றின் குறுக்கே மேம்பால கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு பொதுமக்களின் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார்.

மேலும் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டதுடன் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் கற்பிக்கும் முறையினை பார்வையிட்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எவ்வாறு தன் சுத்தம் மற்றும் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு தயாரிக்கும் முறையை ஆய்வு செய்து சத்துமிக்க காய்கறி மற்றும் கீரை வகைகளை சேர்த்து தரமாகவும், சுகாதார முறையில் சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கிடவும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் காவனிப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Viluppuram , Villupuram: Collector Mohan said that action will be taken against head teachers who do not maintain hygiene in government schools in Villupuram district.
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...