×

பாலவாக்கம் பர்மா காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் கலெக்டரின் உத்தரவு செல்லும்: ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

சென்னை: பாலவாக்கம் பர்மா காலனியில் சட்டவிரோதமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை அடுத்த பாலவாக்கத்தில் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக காலனி உள்ளது. அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பர்மா இந்தியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு 1991ல் 24.45 ஏக்கர் நிலம்  வீட்டு மனைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், 20 இலங்கை தமிழ் அகதிகளை அவர்களுக்கு மாற்று இடம் வழங்கும்வரை தற்காலிகமாக அந்த இடத்தில் தங்குவதற்கு மாவட்ட வருவாய் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பின்னர் அவர்களுக்கு பள்ளிக்கரணை, வெங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மாற்று இடம் வழங்கி அரசு உத்தரவிட்டது.

இதை ஏற்காமல் அவர்கள் தொடர்ந்து பர்மா காலனியிலேயே தங்கியிருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திய உள்ளூர்வாசிகள் பலர் பர்மா இந்தியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து புரட்சி தலைவர் நகர், திருவள்ளுவர் நகர், சிலோன் காலனி என்று காலனிகளை உருவாக்கி அங்கேயே குடியிருந்து வந்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றக்கோரி பர்மா இந்திய கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் கடந்த 2003ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2003 ஆகஸ்ட் 17ல் அப்போதைய தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்திய சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அமர்வு மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்தும் தங்களை அகற்ற தடை விதிக்க கோரியும் ஆக்கிரமிப்பாளர்களின் சங்கங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த நிலம் பட்டாதாரர்களுக்கு சொந்தமானதாக கருத முடியாது.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பிலிருந்து அவர்களை அகற்றுவதை எதிர்க்க மனுதாரர்களுக்கு உரிமையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 2014 ஆஸ்ட் 19ல் இறுதி உத்தரவை பிறப்பித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து முனியப்பன் என்பவர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அஜய் எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நிகில் நய்யார், காஞ்சிபுரம் கலெக்டர், தாசில்தார் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி, முகுல் ரோத்தஹி உள்ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், \”இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது\” என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags : Palavakkam ,Burma Colony ,Supreme Court ,High Court , Collector's order to remove encroachments in Palavakkam Burma Colony goes: Supreme Court upholds I-Court order
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...