வியாசர்பாடியில் தொடர்ந்து குட்கா பொருள் விற்ற கடைக்கு அதிரடி சீல்

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் குட்கா பொருட்களின் நடமாடத்தை தடுக்கவும், அதனை ஒழிக்கவும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வியாசர்பாடி எம்கேபி நகர் 8வது மெயின் ரோடு பகுதியில் பாண்டியன் (54) என்பவருக்கு சொந்தமான அம்பாள் கூல் பார் என்ற கடையில் குட்கா விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்படி எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையிலிருந்து குட்கா பொருட்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து அந்த கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் அந்த கடை மீது நடவடிக்கை எடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு  போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இதையேற்று, நேற்று கொடுங்கையூர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயகோபால் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் எம்கேபி நகர் போலீசார் குறிப்பிட்ட அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். ஏற்கனவே குறிப்பிட்ட அந்த கடைக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்ததால் கடைக்கு  அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: