×

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் அக்.26ல் இறுதி விசாரணை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அப்போதே கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பொதுச் செயலாளர்  இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  சசிகலாவின்  இந்த வழக்கை நிராகரிக்ககோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால் தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இறுதி விசாரணைக்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென இரு தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 26ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Tags : Sasikala ,AIADMK ,General Secretary , Final hearing on October 26 in Sasikala's appeal against dismissal of AIADMK general secretary: Court orders
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா