×

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் இந்தியா, ஜப்பானுக்கு இலங்கை ஆதரவு

கொழும்பு: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜப்பானை நிரந்தர உறுப்பினராக்க  இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், பத்து தற்காலிக உறுப்பினர்களும் உள்ளனர். ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு வீட்டோ என்ற அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிற நாடுகள் தங்கள் நாடுகள் மீது கொண்டுவரும் தீர்மானங்களை ரத்து செய்ய முடியும். இந்த அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், 77வது ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியுடனான சந்திப்பின் போது, ‘சர்வதேச அரங்கில் ஜப்பான் (இலங்கைக்கு) அளித்த ஆதரவைப்  பாராட்டியதுடன், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர்களாவதற்கான  ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு ஆதரவளிக்க  அரசாங்கத்தின் விருப்பத்தை அதிபர் ரணில் வெளிப்படுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Sri Lanka ,India ,Japan ,UN Security Council , Sri Lanka supports India and Japan as permanent members of the UN Security Council
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்