யார் உண்மையான சிவசேனா? தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ‘உண்மையான சிவசேனா யார் என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம்’ என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மாயமானதால், பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே பாஜ மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவோடு ஷிண்டே ஆட்சி அமைத்து முதல்வரானார். இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு ஷிண்டே எழுதிய கடிதத்தில், ‘உண்மையான சிவசேனா நாங்கள்தான். எனவே கட்சியின் வில் அம்பு சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி உத்தவ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘யார் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை,’ என உத்தரவு பிறப்பித்தனர். இது உத்தவ் தாக்கரே தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: