ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி எதிர்த்து மனு அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை:  தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 2ம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூகநல்லிணக்க ஊர்வலம் நடக்கிறது. இதனை பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது.  எனவே, ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.

அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் மனு தாக்கல் செய்யமுடியும் என்று விளக்கம் அளித்தனர்.

Related Stories: