குமரி அனந்தனுக்கு அரசு வீடு: முதல்வர் வழங்கினார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், குமரி அனந்தனுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையினை வழங்கினார். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் குமரி அனந்தன், தான் வாழ்வதற்கு  வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், அவரது கோரிக்கையினை ஏற்று, அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி அனந்தனுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: