ஈரோட்டில் நிலம் அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடனுக்கு ரூ.1.45 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது: மனைவியை போலீஸ் தேடுகிறது

ஈரோடு: ஈரோட்டில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடன் வாங்கியதற்கு ரூ.1.45 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை நில அபகரிப்பு, கந்துவட்டி கொடுமை சட்டத்தில் போலீசார் கைது  செய்தனர். மேலும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (82). இவருக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலம் ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியில் உள்ளது. இந்நிலத்தை அவரது உறவினரான, துய்யம் பூந்துறையை சேர்ந்த பழனிச்சாமி (69), அவரது மனைவி மைதிலி ஆகியோரிடம் கடந்த 2013ல் அடமானமாக வைத்து ரூ.18 லட்சம் கடன் வாங்கியுள்ளார். சில ஆண்டுகள் வட்டியை செலுத்தி வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகள் வட்டியும், அசலும் அவரால் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், அடமானம் வைத்த நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலமாக சமன்படுத்தி விற்பனை செய்ய நில உரிமையாளர் பழனிச்சாமி முயற்சித்துள்ளார். ஆனால் நிலத்தை அடமானம் பெற்ற பழனிச்சாமி, அதை தடுத்து, அசலும் வட்டியுமாக ரூ.1 கோடியே 45 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அடமானம் பெற்ற நிலத்தின் ஆவணங்களை மாற்றி, கடந்த 2014ல் தனது மகனின் பெயருக்கு அந்த நிலத்தை கிரயம் செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து, நில உரிமையாளர் பழனிச்சாமி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த பூந்துறையை சேர்ந்த பழனிச்சாமியை நில அபகரிப்பு, கந்துவட்டி கொடுமை சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி மைதிலியை தேடி வருகின்றனர்.

Related Stories: