மக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆம்னி பஸ் கட்டணம் நிர்ணயம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: ஆம்னி பேருந்துகளில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணத்தை ஓரிரு நாள்களில் நிர்ணயிக்க இருப்பதாக, அதன் உரிமையாளர்கள்  கூறியதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காண எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: அனைத்து சேவைகளையும் அரசால் வழங்க இயலாது. ஏழை மக்களுக்கான சேவைகளை வழங்குவது தான் அரசின் கடமை. அதன்படி சுற்றுப்புற மாநிலங்களை விட குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூடுதல் வசதியை எதிர்பார்ப்பவர்கள் ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். எனவே, மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படாத வண்ணம், கட்டணத்தை ஓரிரு நாள்களில் நிர்ணயிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம் என உரிமையாளர்களுக்குத் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: