செல்போனில் மூழ்குவதால் குடும்பத்தினர் பேசுவதே குறைந்தது ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது. செல்போனில் மூழ்குவதால் பெற்றோர், குழந்தைகள் பேசுவதே குறைந்துள்ளது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்லூரியில் மகளை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. மகளுக்கு பப்ஜி மற்றும் ஃபிரீ பயர் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உண்டு. இந்த விளையாட்டுகள் மூலம் ஜெப்ரின் என்ற இளைஞர் பழக்கமாகி உள்ளார். எனவே அவரும், அவரது நண்பரும் சேர்ந்து எனது மகளை கடத்தியிருக்க வேண்டும். எனது மகளை மீட்டுத்தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதிகள், ‘‘கொரோனா ஊரடங்கு காலம் இளைய தலைமுறைக்கு சோதனையான காலகட்டமாகவே அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடந்தபோது, இளம் தலைமுறையினர் பலர் செல்போன் மோகத்தால் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனர். இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர், நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர். தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது. இதை தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.

செல்போனில் மூழ்குவதால், பெற்றோரும், குழந்தைகளும் பேசிக் கொள்வதே குறைந்துள்ளது. ஃபிரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவரே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’’ என்றனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட பெண் விரும்பியபடி அவரது பெற்றோருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறார். மனுதாரரின் மகளுக்கு அந்த நபர் எதிர்காலத்தில் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது. மனுதாரரின் மகளிடம் கையெழுத்து பெற்ற வெற்றுப் பேப்பரை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: