×

ராகுல்காந்தி நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார்: கூடலூரில் இரண்டு நாள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் அங்கிருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார். அங்கு 11ம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. இன்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.  

கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள்  (வியாழக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். வரும் 29ம்தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் ராகுல்காந்தி கோழிப்பாலத்தில் இருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகிறார்.

அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் பாதயாத்திரையாக வருகிறார்கள். அப்போது பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதிக்கு வரும் ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து அன்று இரவு அவர் கூடலூரில் உள்ள பள்ளி மைதானத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 30ம்தேதி கூடலூரில் இருந்து நடைபயணத்தை முடித்து கொண்டு கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்கிறார். கூடலூர் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி வன கிராமங்களுக்குள் அவர்கள் புகுந்து வருகின்றனர். தற்போது ராகுல்காந்தி கூடலூர் வருவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Rakulkandi ,Tamil Nadu ,Cuddalore , Rahul Gandhi returns to Tamil Nadu the day after tomorrow: He will undertake a two-day padayatra in Kudalur
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...