ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது: பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம்  பல மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆம்னி பேருந்து களின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும் அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்றைய தினம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துதுறை அமைச்சர்,  ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மட்டுமல்லாமல் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி கொண்ட மாநிலமும் தமிழ்நாடு தான்; குறைவான கட்டணத்தில் பேருந்து சேவையை அளிப்பதும் தமிழ்நாடு தான் எனக் கூறினார். மேலும் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து இரண்டொரு நாளில் தெரிவிப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக அவர் பேட்டியளித்தார்.

Related Stories: