அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

சென்னை: அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்து அறநிலையத்துறை அமைச்சரின் சகோதரர் பி.கே.தேவராஜூலு (63). இவர் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெரு பகுதியில் தனது மனைவி பார்வதி, மகன்கள் லோகேஷ், தினேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் டெய்லராக பணி புரிந்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருதய பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளுக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து ஓட்டேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெரு பகுதியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பல்வேறு நோய்களினால் மன உளைச்சலில் தேவராஜூலு இருந்து வந்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: