×

தொடர் விடுமுறையையொட்டி பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு 35 சிறப்பு பேருந்து இயக்கம்

பொள்ளாச்சி : சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

மேலும், விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் தென்மாவட்ட பகுதிகளுக்கும், சென்னைக்கும் தினமும் பஸ் போக்குவரத்து உள்ளது. தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ் இயக்கப்படும்.

இந்த ஆண்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை அவ்வப்போது முகூர்த்த நாட்கள் இருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது. பின் கடந்த 2 வாரமாக பஸ் நிலையத்தில் கூட்டம் குறைவால், வெளியூர் பஸ்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதற்கிடையே, வரும் 30ம் தேதியுடன் பள்ளி அரையாண்டு தேர்வு நிறைவடைந்து அக்.1ம் தேதி முதல் 5ம் தேதி வரை என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி விடுமுறையும் அதன் பின்னர், 4 மற்றும் 5ம் தேதிகளில் சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து தொடர்ந்து விடுமுறை நாட்கள் இருப்பதால், வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் 30ம் தேதி மாலை முதல் 5ம் தேதி வரை என தொடர்ந்து 5 நாட்களும், வழக்கம்போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்கு  கூடுதல் பேருந்து இயக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 35 பேருந்துகள் சிறப்பு பஸ்களாக கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, வால்பாறையில் வசிக்கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றுவதால், சரஸ்வதிபூஜையையொட்டி வால்பாறைக்கு, அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:  பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், வெகுதூர பகுதிகளுக்கும் என தினமும் 190 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெகுதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. முக்கிய விசேஷ நாட்களில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பணியாற்றும் மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு செல்லும்போது, அச்சமயங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நடப்பாண்டில், வரும் 30ம் தேதிவரை பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறையாக இருந்தாலும், சரஸ்வதி பூஜை பண்டிகை இருப்பதால், பெரும்பாலானோர் குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்வர்.இதனால், வெளியூர்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.கொரோனாவுக்கு முன்பு வரை வெளியூர்களுக்கு சுமார் 25 சிறப்பு பேருந்துகளே இயக்கப்பட்டது.

இந்த முறை சரஸ்வதி பூஜை மற்றும் பள்ளி விடுமுறை என்பதால், 35 பேருந்து கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழியார் மற்றும் வால்பாறை, உடுமலை, ஆனைமலைக்கு என  எந்தெந்த பகுதிகளுக்கு இன்னும் பஸ் இயக்கம் கூடுதலாக வேண்டும் என்பதையறிந்து, அப்பகுதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Tags : Pollachi , Pollachi: Due to the series of holidays including Saraswati Puja, additional 35 buses from Pollachi Central Bus Station to outlying areas.
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!