×

கோரிக்கைகளை வலியுறுத்தி மஞ்சூர், எமரால்டு பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மஞ்சூர் : ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மஞ்சூர், எமரால்டு பகுதிகளில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மஞ்சூர் மேல் முகாமில் உள்ள குந்தா புனல் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை றிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மின்வாரிய பொறியாளர் கழக பொருப்பாளர் ஜீவநேசகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க மாநில பொருப்பாளர் பாலமுருகன், சிவசரன், குணசிங், அண்ணா பொது தொழிலாளர் சங்க தலைவர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதை தொடர்ந்து மின்வாரிய உத்தரவு 14.4.22ஐ திரும்ப பெற வேண்டும். மின் உற்பத்தி திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்களின் பதவி ஒழிப்பை கைவிட வேண்டும். துணை மின்நிலையங்கைளை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்ககூடாது. பதவி உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 1.12.2019 முதல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மின்வாரிய தொழிலாளர் சம்மேளன தலைவர் கிருஷ்ணன், ஐக்கிய தொழிலாளர் சங்க பொருப்பாளர் ஜெயக்குமார், அம்பேத்கார் தொழிற்சங்க பொருப்பாளர் கலையரசி, மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) செயலாளர் முரளிதரன், மற்றும் சதாசிவன், அனந்தகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரபேல்ஜோசப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இதேபோல் எமரால்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் அங்கையர்கன்னி தலைமை தாங்கினார். பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வீரேந்திரகுமார்,  லுாயிஸ், வேலாயுதம், ஜோதி அழகேஸ்வரன், மகேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Tags : Power Board ,Manjur ,Emerald , Manjoor: Union joint action committee in Manjoor and Emerald areas emphasizing various demands including wage hike.
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்