×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு ₹1.45 லட்சம் உதவி-கலெக்டர் வழங்கினார்

தர்மபுரி : தர்மபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு ₹1.45 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், முதியோர் உதவிதொகை கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 436 மனுக்கள் அளித்தனர்.

மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் வாரிசுதாரருக்கு ₹25 ஆயிரம் திருமண நிதி உதவி, மேலும் 7 பேருக்கு ₹1.10 லட்சம் கல்வி உதவித்தொகை, மரணமடைந்த முன்னாள் படைவீரர் உக்கரப்பனி மனைவி கௌரிக்கு ₹10 ஆயிரம் ஈமச்சடங்கு நிதி உதவி என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ₹1.45 லட்சம் நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் 100 சதவீத ஆதார் எண்ணை இணைக்கும் பணியை முழுமையாக மேற்கொண்ட அரூர் வட்டம் எண்.233ல் வாக்குசாவடி நிலை அலுவலர்களான ஆசிரியர்கள் நிவாஸ், சாந்தகுமார் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.     கூட்டத்தில் டிஆர்ஓ அனிதா, தனித்துணை கலெக்டர் சாந்தி, உதவி ஆணையர் (கலால்) தணிகாசலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் வெங்கடேஷ்வரன், தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Tags : People's Grievance Meeting , Dharmapuri: The Collector distributed welfare assistance worth ₹1.45 lakh to the heirs of ex-servicemen in a public grievance meeting at Dharmapuri.
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து