×

சென்னை மாநகராட்சி சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வரைவு செயல் திட்டம் தயாரிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரைவு செயல்திட்டம் தயாரிக்க பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் என்ற வார்த்தை சமீப காலமாக தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. உலக அளவில் பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூழலியல் சார்ந்து இயங்குபவர்களும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். சூழலியல் மீது அதிகளவு கவனம் செலுத்தாமல் விட்டதின் விளைவு, கடல் மட்டம் அதிகரிப்பு, வெப்பம் அதிகரிப்பு, காற்று மாசு என்று அனைத்து துறைகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் தயாரித்து, அதை அமல்படுத்துவதான் சரியாக இருக்கும்.

இந்த காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டங்களில் மன நலத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களின் மன நலனை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளுவதில் சுற்றுச்சூழலுக்குதான் அதிக பங்கு உள்ளது. எனவே, கால நிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டங்களில் மனநலம் தொடர்பானவற்றைச் சேர்ப்பதை இனியும் புறக்கணிக்க முடியாது. கொரோனா தொற்றுக்குப் பிறகு சுகாதாரத்தை மீட்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம், ஐ.நா சபையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஸ்வீடன் நகரின் ஸ்டாக்ஹோம் நகரில் 2 நாட்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் குறிப்பாக சுற்றுச்சூழல் சார்ந்து மனிதர்களின் உடல் நலம் மற்றும் மன நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் 6 பிரிவுகளில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான வாக்குறுதி அறிக்கையும் வெளியிடப்பட்டது.

ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) கடந்த பிப்ரவரி 28ம் தேதி, 67 நாடுகளைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்குகொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன நுகர்வு வாழ்க்கை முறைகளால்  இயற்கையைவிட அதிகமான வெப்பம் ஏற்படுகிறது. அப்படி உருவாகும் அளவுக்கு  அதிகமான வெப்பம் பூமியிலிருந்து வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதை  வெளியேற்றுவதற்கான வழியை விரைவில் ஏற்பாடு செய்யாவிட்டால் பூமியில் வாழும்  உயிர்களின் வாழ்க்கை தரமும், நிலையான எதிர்காலமும் பாதிக்கப்படும்’ எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் உடல் நலன் மற்றும் மன நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மன உளைச்சல், தூக்கமின்மை, கவலை, தற்கொலை, மனச் சேர்வு உள்ளிட்ட மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உலக வெப்பம் அதிகமானால் பூமியில் உள்ள  அனைத்து உயிரினங்களும் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகின்றன என்பதை தெளிவாக  எடுத்துக்காட்டுகிறது இந்த அறிக்கை.
கடந்த 2021ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எடுத்த ஆய்வின்படி 95 நாடுகளில் 9 நாடுகள் மட்டுமே தங்களின் காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டங்களில் மன நலத்தை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி, ஒருங்கிணைப்பு கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு, சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி, அவரச கால திட்டம், நிதி உதவி, காலநிலை மாற்ற திட்டங்களுடன் இணைந்த சுகாதார திட்டம், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிவற்றில் உலக நாடுகள் செயல்பட வேண்டும என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரம் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 5வது பெருநகரமாக உள்ளது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்க சி-40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் இணைந்துள்ளது. சி-40 நகரங்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் காலநிலை செயல்திட்டத்தை தயாரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு செயல் திட்டம் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு செயல் திட்டப் பரிந்துரைகள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை chennaiclimateactionplan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 26.09.2022க்குள் தெரிவிக்கும்படி வரைவு செயல்திட்டப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த வரைவு செயல்திட்டப் பரிந்துரைகளின் தமிழ்ப்பதிவு இணையதளத்தில் 27.09.2022 அன்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை 26.10.2022 வரை தெரிவிக்கும் வகையில் ஒருமாதக் காலத்திற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : Chennai Corporation , Preparation of draft action plan to deal with climate change on behalf of Chennai Corporation: Public can comment
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...