
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் பெற்ற சுமார் 1 லட்சம் பேர் உறுதிமொழி பத்திரம் வழங்கினால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இதுகுறித்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியாசமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும், சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட 10 நியாய விலை கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.