×

ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நடவடிக்கைக்கு தடை

மும்பை: வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8ம் தேதி ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், அனில் அம்பானி வேண்டும் என்றே ஸ்விஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல் ரபீக்  தாதா, ‘‘ அனில் அம்பானிக்கு எதிரான குறிப்பிட்ட சட்டப்பிரிவு 2015ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11 ஆண்டுகளில் நடந்தவை. எனவே அந்த சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்றார். இதைத் தொடர்ந்து, விசாரணையை நவம்பர் 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதித்தனர்.

Tags : Anil Ambani , Prohibition against Anil Ambani in Rs 814 crore black money case
× RELATED அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில்...