×

மக்களை பாதுகாப்பதே நமது இலக்கு வெள்ள தடுப்பு பணிகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அனைத்துதுறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: வெள்ள தடுப்பு பணிகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, வெள்ள பாதிப்புகளை தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை செயலாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். இத்தகைய முன்னெச்சரிக்கைக் கூட்டங்கள் தான் அவசிய, அவசரமானவை. அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இங்கு பேசிய அதிகாரிகள் அனைவரும் விரிவாக எடுத்து சொன்னீர்கள். அனைத்துத் துறையும் தயார் நிலையில் இருப்பதை அறிந்து மன நிறைவடைகிறேன். கடந்த ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்த போது பெருமழையைச் சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் பெரும் சவாலாகவே இருந்தது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று நாம் அப்பொழுதே முடிவெடுத்தோம். அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

இதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த ஆலோசனைப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்படவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  

இதுமட்டுமின்றி சென்னையின் முதன்மையான நீராதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதாக அறிகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும் மழைக்காலத்திற்கு முன்பாக ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று அதை பார்வையிட வேண்டும். இம்முறை சென்னை நகரில் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று ஓரளவுக்கு நம்பிக் கொண்டிருக்கிறேன், எதிர்பார்க்கின்றேன். அதே வேளையில், தேங்காது என்கிற நினைப்போடு நீங்களும் மெத்தனமாவும் இருந்து விடக் கூடாது.

மழைக்காலத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதனால் நல்ல பலன் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த முறை வானிலை எச்சரிக்கை தகவல்களைக் குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது. அதனைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவல்களை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் தரவுகளையும், வருவாய்த் துறையில் ஒப்பிட்டு அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளை நீங்கள் செய்ய வேண்டும்.
நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதில் குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் நாம் கவனமெடுத்து செயல்பட்டால், கடும் மழையினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்கள், உழவர்கள், மீனவர்கள் போன்றவர்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை ஓரளவுக்கு குறைக்க முடியும். அதுதான் இந்த அரசினுடைய நோக்கம். உங்களுக்கு ஏற்படக்கூடிய எண்ணங்களை, உடனுக்குடன் அரசுக்கு நீங்கள் தெரிவித்து அந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும்தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்பது இல்லை. உடனுக்குடன் நீங்கள் சொல்ல வேண்டும். பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு. எனவே, நீங்கள் அனைவரும் இதில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும்.

Tags : Chief Minister ,M.K.Stal , Our goal is to protect the people and we should finish the flood prevention work as soon as possible: Chief Minister M.K.Stal advises all departments to work together.
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...