×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல்: ஆளுநரின் அனுமதிக்கு பிறகு விரைவில் அமலாகும்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய அவசர சட்டத்துக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்  பெறப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநரின் ஒப்புதல்  பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என்று உள்துறை செயலாளர்  அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை 9.35 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 45 நிமிட நேரம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய அவசர சட்டம்  இயற்றுவது தொடர்பாக ஒப்புதல்  பெறப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநரின் ஒப்புதல்  பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் கடந்த 10.06.2022 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தினை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வி துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்து பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், இந்த அவசர சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, நேற்று (26ம் தேதி) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க அனுமதி அளிக்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும்  அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் குறித்து முக்கிய முடிவு  செய்வது, தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தை எப்போது நடத்துவது, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய மசோதாக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் மாதம் இறுதியில்  அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய  முடிவுகள் குறித்த அறிவிப்புகள், ஜெயலலிதா மரணம் குறித்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட குழு ஜூலை 7ம் தேதி அறிக்கையை அரசிடம் அளித்தது.
* பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கலந்தாலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், சட்டத்துறை ஆகஸ்ட் 29ல் வரைவு அவசர சட்டத்தை தயாரித்தது.


Tags : Chief Minister ,MK Stalin ,Governor , Cabinet meeting chaired by Chief Minister M K Stalin approves online rummy ban law: Will come into force soon after Governor's approval
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...