×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி முதல் நாள் விழாவில் கலந்து கொண்டு ஆன்மிகச் சொற்பொழிவை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில்  நடைபெற்ற நவராத்திரி முதல் நாள் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, ஆன்மிகச் சொற்பொழிவை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.


2022 – 2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில்,  “திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு முக்கிய திருக்கோயில்களில் அந்தந்த மாவட்ட கலை பண்பாட்டுத்துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட அந்தந்த திருக்கோயில்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான  இன்று (26.09.2022) அருள்மிகு கற்பகாம்பாள் அன்ன வாகனத்தில் கொலுமண்டபத்திற்கு எழுந்தருளிய நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கலந்துக் கொண்டு, நவராத்திரி விழாவில் கலந்துக் கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல்கள், ரவிக்கைத் துணி, பழங்கள் மற்றும் துளசிக் கன்றினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், கலைமாமணி திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்களின் “நவராத்திரி நாயகிகள்” என்ற தலைப்பிலான ஆன்மிகச் சொற்பொழிவை தொடங்கி வைத்தார்.

இத்திருக்கோயிலில் நவராத்திரி கொலுவும், வறுமையிலும், கொட்டும் மழையிலும் அடியவர்களுக்கு உணவளித்த இளையான்குடி மாற நாயனாரின் வரலாற்றை சித்தரிக்கும் காட்சியமைப்பும், கைலாய மலையில் சிவன் வீற்றிருக்கும் காட்சி அமைப்பும் பக்தர்கள் பரவசம் அடையும் வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, கூடுதல் ஆணையர் திருமதி ந.திருமகள், திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திரு.ப.திருநாவுக்கரசு, திரு.ஆறுமுகம், திரு.எம்.பி.மருதமுத்து, இணை ஆணையர்கள் திருமதி த.காவேரி, திருமதி கே.ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags : minister ,sekarbabu ,navratri ,mailapur kapaleeswarar temple , Minister Shekharbabu attended the first day of Navratri ceremony at Kapaleeswarar Temple in Mylapore and started the spiritual discourse!
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை