×

ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10.06.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தினை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின்  பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு  செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு  வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று (26.09.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.    

இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை தெரிவித்துள்ளது.



Tags : K. ,Tamil Nadu Cabinet ,Stalin , The Tamil Nadu Cabinet headed by Chief Minister M.K.Stalin approved the online gambling emergency law!
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...