×

பரம்பிக்குளம் அணையில் ரூ.7 கோடி செலவில் புதிய ஷட்டர்: அதிகாரிகள் தகவல்

ஆனைமலை: உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியான பரம்பிக்குளம் அணை ஷட்டர், ரூ.7 கோடி செலவில் புதிதாக சீரமைக்கப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில மாதமாக பெய்த பருவமழையால் பரம்பிக்குளம் அணையில் கடந்த ஜூலை மாதம் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் உள்ள மெயின் 3 மதகுகள் வழியாக உபரியாக தண்ணீர் அடிக்கடி திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி அதிகாலையில் அணையில் உள்ள 2வது மதகு ஷட்டர் தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக, வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியும், அதன்பின்னர் 16,500 கனஅடி தண்ணீரும் உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது.

பரம்பிக்குளம் மதகு உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போர்க்கால அடிப்படையில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, புதிய ஷட்டர் அமைப்பதற்கு பொதுப்பணித்துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதன் அடிப்படையில் பரம்பிக்குளம் அணையில் ரூ.7 கோடியில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஷட்டர் வரும் அக்டோபரில் நிறுவப்படும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிஏபி திட்டத்தில் மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் 3 மெயின் மதகுகளில் ஒவ்வொன்றும் 27 அடி உயரத்தில் ஷட்டர் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 21ம் தேதி அதிகாலையில் எதிர்பாராதவிதமாக, பரம்பிக்குளத்தில் உள்ள 2வது மதகு ஷட்டர் உடைந்தது. இதனால் 3 மதகு வழியாகவும் அதிகளவு தண்ணீர் உபரியாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் இன்று (நேற்று) வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதில், 1200 கனஅடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக கொண்டு செல்வதற்காக, தூணக்கடவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 40 அடி வந்தால் மட்டுமே, புதிய ஷட்டர் அமைக்கும் பணி நடக்கும். புதிய ஷட்டர் அமைக்க நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

போர்க்கால அடிப்படையில் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில், சுமார் 5.25 டிஎம்சி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு அணையின் நீர்மட்டம் 40 அடியாக வந்தவுடன் புதிய மதகு அமைக்கும் பணி துவங்கப்படும். இதற்கான தளவாட பொருட்கள் தயார்படுத்தப்படுகிறது. வரும் நாட்களில் புதிய மதகுகள் அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Tags : Parambikulam Dam , New shutter at Parambikulam Dam at a cost of Rs 7 crore: Officials inform
× RELATED காண்டூர் கால்வாயில் கசிவு: வீணாகும் பிஏபி தண்ணீர்