ஆஸி.க்கு எதிரான தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது; பும்ரா, ஹர்ஷல் தெ.ஆ. தொடரில் சிறப்பாக செயல்படுவர்: கேப்டன் ரோகித்சர்மா நம்பிக்கை

ஐதராபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் கடைசி போட்டி நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது. கேமரூன் கிரீன் 19 பந்தில், 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 52, டிம் டேவிட் 27 பந்தில், 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 54 ரன் விளாசினர். ஜோஷ் இங்கிலிஸ் 24, பிஞ்ச் 7, ஸ்டீவன் ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6, மேத்யூ வேட் ஒரு ரன்னில் அவுட் ஆகினர். டேனியல் சாம்ஸ் நாட்அவுட்டாக 28 ரன் அடித்தார். இந்திய பவுலிங்கில், அக்சர் பட்டேல் 3, புவனேஸ்வர்குமார், சாஹல், ஹர்சல்பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 1, ரோகித்சர்மா 17 ரன்னில் வெளியேற விராட்கோஹ்லி-சூர்யகுமார் யாதவ் 3வது விக்கெட்டிற்கு 104 ரன் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 36 பந்தில், 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 69 ரன்னில் அவுட் ஆனார். சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கோஹ்லி, 2வது பந்தில் கேட்ச் ஆனார். அவர் 48 பந்தில், 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன் அடித்தார். 5வது பந்தில் ஹர்திக் பாண்டியா பவுண்டரி விரட்ட இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 1, ஹர்திக் 25 ரன்னில் (16பந்து) களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 2-1 என இந்தியா தொடரை வென்றது. சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதும், 3 போட்டியில் 8 விக்கெட் எடுத்த அக்சர் பட்டேல் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: “ஐதராபாத் எனக்கு பிடித்த இடம். டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய நினைவுகள் இன்னும் இருக்கிறது. மூன்று போட்டிகளிலும் வெவ்வேறு பேட்டர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது பேட்டிங் பலத்தை காட்டுகிறது. மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன. குறிப்பாக டெத் ஓவர் பவுலிங். பும்ரா, ஹர்ஷல் காயத்தில் மீண்டு வந்தப் பிறகு சிறப்பாக செயல்படவில்லை. வலுவான அணிக்கு எதிராக அவர்கள் வந்த வேகத்தில் சிறப்பாக செயல்படுவது எளிதல்ல. இருவரும் செட்டில் ஆக கூடுதல் நேரம் எடுக்கும் என நினைக்கிறேன். தென்ஆப்ரிக்க தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன், என்றார்.

ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், நான் 4வது இடத்தில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். கடினமான சவால் இருக்கும். ஆனால் என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் கொஞ்சம் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். மிட்-ஆஃப் மீது அடிக்க எப்போதும் முயற்சிப்பேன். அப்படித்தான் நெட்ஸில் பயிற்சி செய்கிறேன், என்றார்.

தொடர் நாயகன் அக்சர் பட்டேல் கூறுகையில், அணியின் வெற்றியுடன் தொடர் நாயகன் விருது பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல்லில் பவர்பிளேயில் பந்துவீசியது கைகொடுத்தது. பேட்டர் நல்ல ஷாட் அடித்தாலும், நானே பின்வாங்காமல் எனது திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிக்கிறேன், என்றார்.

அணிக்காக பங்களிப்பு செய்தது மகிழ்ச்சி-கோஹ்லி: வெற்றிக்கு பின் விராட் கோஹ்லி அளித்த பேட்டி: “நான் ஜம்பாவைத்தான் டார்கெட் செய்தேன். அவர் மிகச்சிறந்த பவுலர். அவரை அட்டாக் செய்தால் மட்டுமே, மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட முடியும் என நினைத்தேன். அதேபோல் செய்தேன். சூர்யகுமார் யாதவ் ஒருபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அப்போது பெவிலியனில் இருந்த ரோகித் ஷர்மா, ‘நீங்கள் நிதானமாக விளையாடுங்கள். சூர்யகுமார் அடிக்கட்டும் எனக் கூறினார். அதேபோல் செய்தேன். சூர்யகுமார் விளையாடுவதை பார்த்து, பந்துகள் எப்படி வருகிறது, எப்படி அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன். சூர்யகுமார் யாதவ் கடந்த 6 மாதங்களாகவே மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். நாங்கள் கடைசி ஓவரில் 4,5 ரன்களைத்தான் சேஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கில் விளையாடினோம். ஆனால், 11 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. இதனால், முதல் பந்திலேயே சிக்சர் அடித்துவிட வேண்டும் என முடிவு செய்துதான் அடித்தேன். அணிக்காக பங்களிப்பு செய்தது மகிழ்ச்சி, என்றார்.

புதிய உலக சாதனை

* இந்த ஆண்டில் இந்தியா இதுவரை 21 டி.20 போட்டியில் வென்றுள்ளது. இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் டி.20யில் அதிக வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் கடந்த ஆண்டில் 20 வெற்றிகளை பெற்றிருந்தது. அந்த சாதனையை இந்தியா தகர்த்தது.

* 2021ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி சேசிங் செய்த 14 டி.20 போட்டிகளில் 13ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தோல்வியை சந்தித்தது.

* இந்திய அணியின் கேப்டனாக ரோகித்சர்மா 33 டி.20 போட்டிகளில் வென்றுள்ளார். டோனி 42 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கோஹ்லி தலைமையில் 32 வெற்றி கிடைத்துள்ளது.

நாங்கள் போராடிய விதம் அற்புதம், ஆரோன் பிஞ்ச் அளித்த பேட்டி: இது ஒரு நல்ல தொடர். நாங்கள் எதிர்த்துப் போராடிய விதம் அற்புதம். உண்மையில் கிரீன் போன்ற இளம் வீரருடன் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது ஒரு கவுரவமான ஸ்கோர் என்று நாங்கள் நினைத்தோம். கொஞ்சம் பனியாக இருந்தது, விக்கெட்டுகளை எடுக்காவிட்டால், இந்தியாவை அடக்கி வெல்ல முடியாது. சில சமயங்களில் நாங்கள் பேட் மற்றும் பந்தில் ஸ்லோவாக இருந்தோம், ஆனால் உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக இதுபோன்ற இறுக்கமான தொடரை விளையாடுவது வீரர்களை நல்ல நிலையில் வைத்திருக்கப்போகிறது. கிரீன் தீவிர ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் ஆட்டத்தை எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, என்றார்.

Related Stories: